பள்ளிக் கல்வி அமைச்சர் வீடு முற்றுகை : தமிழ் வழிக் கல்விக் கூட்டியக்கப் பொதுக்குழு முடிவு!



அரசுப் பள்ளிகளில் தமிழை அப்புறப்படுத்தி ஆங்கில வழிப்பிரிவுகளைத் திணிப்பதைக் கண்டித்து பள்ளிக் கல்வி அமைச்சர் வீடு முற்றுகைப் போராட்டம்! தமிழ் வழிக் கல்விக் கூட்டியக்கப் பொதுக்குழு முடிவு.



தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கப் பொதுக்குழுக் கூட்டம் 02.05.2014 அன்று மாலை சென்னை க.க.நகரில் நடந்தது. கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு மல்லை சத்யா, தமிழர் வாழ்வுரிமைக் கட்சி மாநிலத் தொழிற்சங்கச் செயலாளர் திரு சைதை கே.வி.சிவராமன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் துணைப் பொதுச் செயலாளர் தோழர் இரா.பச்சைமலை, திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசிக்குமரன், மக்கள் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா.கல்விமணி, தமிழ்த் தேச மக்கள் கட்சித் தலைவர் தோழர் தமிழ்நேயன், உலகத் தமிழ்க் கழகத் தலைவர் முனைவர் ந.அரணமுறுவல், தென்மொழி ஆசிரியர் திரு. மா.பூங்குன்றன், தமிழ்நாடு மக்கள் கட்சித் தலைமை செய்தித் தொடர்பாளர் தோழர் அருண்சோரி, சேவ் தமிழ்ஸ் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் தி.செந்தில்குமார், தமிழர் எழுச்சி இயக்கப் பொறுப்பாளர் தோழர் ச.எழிலன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்முருகன், தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் செயப்பிரகாசு நாராயணன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சென்னை செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன், தமிழர் தேசிய இயக்கப் பொறுப்பாளர் தோழர் ஆவடி செ.ப.முத்தமிழ்மணி, தந்தை பெரியார் திராவிடர் கழக திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தோழர் பா.நாகராசன், தலைநகர்த் தமிழ்ச் சங்கம் தோழர் க.சோழநம்பியார், தொழிலாளர் சீரமைப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் மா.சேகர், திரு. அன்றில் பா.இறையெழிலன், புலவர் இரத்தினவேலவர், தமிழ்த் தேசக் குடியரசு இயக்கப் பொறுப்பாளர் தோழர் சிவ.காளிதாசன், பொன்னேரி வழக்குரைஞர் பொன்.செல்வன், திரு. அ.முல்லைத்தமிழன், திரு. அ.சி.சின்னப்பத்தமிழர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பல்வேறு முன்மொழிவுகள் குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தன. இறுதியில் பின்வரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழக அரசு 2013-2014 கல்வியாண்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட பிரிவுகளைத் தொடங்குவதென்று திட்டமிட்டு முதற்கட்டமாக 1ஆம் வகுப்பிலும் 6ஆம் வகுப்பிலும் ஆங்கில வழிப்பிரிவுகளைத் தொடங்கியது. நடப்பு 2014-2015 கல்வியாண்டில் இரண்டாம் வகுப்பிலும், ஏழாம் வகுப்பிலும் ஆங்கிலவழிப் பிரிவுகளைத் தொடங்குகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிக்கல்வியில் தமிழைப் பயிற்று மொழி நிலையிலிருந்து முற்றிலுமாக நீக்கிவிடும் போக்கில் தமிழக அரசு தீவிரமாக செயல்படுகிறது. இதை ஒரு சாதனையாக நிதிநிலை அறிக்கையில் முதலமைச்சர் கூறினார். ஆளுங்கட்சியான அ.இ.அ.தி.மு.க.வின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையும் தமிழ்நீக்க - ஆங்கிலவழித் திணிப்புத் திட்டத்தை சாதனையாக கூறியுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும் மாணவர் சேர்க்கையில் ஆங்கில வழிப்பிரிவுகளில் சேர்ப்பதற்கு முன்னுரிமை தருகிறார்கள்; முனைந்து செயல்படுகிறார்கள்.

தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் கடந்த 2013 மே 28ஆம் நாள் சென்னை பள்ளிக்கல்வி இயக்கக வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி, ஆங்கிலவழிப் பிரிவுத் திணிப்புத் திட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தியது. அதில் கலந்து கொண்ட சற்றொப்ப 300 பேர் தளைப்படுத்தப்பட்டனர். அதன்பிறகு, சூன் 17-இல் மாவட்டத் தலைநகரங்களில் மேற்படி கோரிக்கையை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். 2013 ஆகத்து 7-இல் சென்னையில் கோட்டையை நோக்கி கோரிக்கை விண்ணப்பம் அளிக்கும் மாபெரும் பேரணி நடத்தினோம். அதில் 1200 பேர் தளைப்பட்டனர். 

தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் 2014 சனவரி 24 அன்று, சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வி அமைச்சர் திரு. கே.சி.வீரமணி அவர்களை நேரில் சந்தித்து, ஆங்கில வழித் திணிப்பால் ஏற்படும் அபாயங்களை விளக்கி, அத்திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி வேண்டுகோள் விண்ணப்பம் கொடுத்தோம். அதே போல், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் திருவாட்டி. சபீதா அவர்களிடமும் விண்ணப்பம் கொடுத்தோம். 

நமது தாய்மொழியாகவும் தேசிய மொழியாகவும் உள்ள தமிழைக் காப்பாற்றவும் தமிழ் வழியில் பயின்று தமிழர்கள் உலகத்தாரோடு போட்டியிடும் வகையில் அறிவுத்திறன் பெற்றிடவும் நாம் எடுத்த அறவழிப் போராட்டங்களையும் கோரிக்கை விண்ணப்பங்களையும் சிறிதளவு கூட தமிழக அரசு சட்டைசெய்யவில்லை. தமிழை வெளியேற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ளது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆங்கிலவழியில் சேர்க்க விரும்புகிறார்கள் என்று தமிழக அரசு சொல்கிறது. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கை, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் இடஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றினால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்வழியில் சேர்ப்பர். மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண்மை ஆகியவற்றில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் 80 விழுக்காடு தமிழ்வழியில் படிப்பவர்களுக்கு ஒதுக்கீடு செய்து சட்டம் இயற்ற வேண்டும். அதேபோல், வேலை வாய்ப்பில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 80 விழுக்காடு ஒதுக்கீடு செய்து சட்டம் இயற்ற வேண்டும். அரசுப் பள்ளிகளில் உள்கட்டுமானங்களை வலுப்படுத்த வேண்டும். கல்விக் கொள்ளை வணிகத்திற்காக மெட்ரிக்குலேசன் – சி.பி.எஸ்.இ. கடைகளைத் திறந்து வைக்கும் இலாபவேட்டைக்காரர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறான பல்வேறு கோரிக்கைகளை நாம் தமிழக அரசுக்குத் தொடர்ந்து வைத்து வருகிறோம். ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக கற்பதை நாம் ஏற்கிறோம். இவற்றில் எதையும் செய்ய தமிழக அரசு முன்வரவில்லை.

தமிழக அரசின் தமிழ் நீக்க – ஆங்கிலத் திணிப்புத் திட்டம் தொடர்ந்து நிறைவேறினால், முதற்கட்டமாக பள்ளிக் கல்வியிலிருந்து தமிழ் நீக்கப்படும். அடுத்த கட்டமாக தமிழக அரசின் ஆட்சியில் இப்பொழுதிருக்கும் கொஞ்ச நஞ்ச தமிழ் ஆட்சி மொழியும் நீக்கப்பட்டுவிடும். தமிழர்கள் தங்கள் தாயகத்திலேயே ஆங்கிலம் – இந்தி போன்ற அயல் மொழிகளுக்கும், அயல் இனத்தாருக்கும் அடிமைப்பட்டு தங்கள் மொழியையும் இனத்தையும் இழக்கும் இழிநிலை உண்டாகும். அயல் இனத்தாரை அண்டிப்பிழைக்கும் அவலம் தான் மிஞ்சும்.

எனவே, தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்புத் திட்டத்தைக் கண்டித்தும், அதனைக் கைவிட வலியுறுத்தியும், சென்னையில் பள்ளிக்கல்வி அமைச்சர் வீட்டை 2014 மே 28 அறிவன் (புதன்) கிழமை அன்று முற்றுகையிடும் போராட்டம் நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது.

-=-=-=-=-=-=-=-
வேண்டுகோள்
-=-=-=-=-=-=-=-
தமிழ்வழிக் கல்விக் கூட்டமைப்பில் உள்ள உறுப்பு அமைப்புகளும், மற்றும் வெளியில் உள்ள தமிழ் அமைப்புகளும் தமிழ்ச் சான்றோர்களும் இன – மொழி உணர்வாளர்களும் இப்போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் நிலைபாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அளவிற்குப் பெருந்திரளான எண்ணிக்கையில் மக்கள் இதில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்.

நம் மொழி காக்க நடக்கும் இப்போராட்டத்தை மக்கள் திரள் போராட்டமாக நடத்திட, வரலாற்றில் தடம் பதிக்கும் போராட்டமாக ஆக்கிட ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு உணர்வாளரும் சென்னையிலும், மாவட்டங்களிலும் அந்தந்த வட்டாரங்களிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தியும், சுவரெழுத்து எழுதியும், துண்டறிக்கைகள் வழங்கியும், பதாகைகள் கட்டியும், உணர்வாளர்களை நேரடியாகச் சந்தித்து உரையாடியும் போராட்டத்திற்கு மக்களை அழைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

தங்களன்புள்ள,
பெ.மணியரசன்,
ஒருங்கிணைப்பாளர், தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம். 
Share on Google Plus

About தமிழ்த் தேசியன்

    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துகள்:

Post a Comment