தமிழ்நாடு அரசே!
பள்ளிக் கல்வியில் ஆங்கிலவழியைத் திணிக்காதே!
தமிழ்வழிக் கல்வியை அழிக்காதே!
தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 80% வேலை ஒதுக்கு!
சென்னைத் தலைமைச் செயலகம் முன்
மூன்று நாள் தொடர் மறியல்..!
========================================
காலம்: தி.பி. 2046 ஆடி 32, ஆவணி 1, 2
2015 ஆகத்து 17, 18, 19 - திங்கள், செவ்வாய், அறிவன் (புதன்)
========================================
தொடக்கப் பள்ளியிலிருந்து மேல்நிலைப் பள்ளி வரை, அரசு பள்ளிகளில் அறிவியல், கணிதம், வரலாறு, வணிகம் முதலிய பாடங்களை ஆங்கில மொழியில் கற்பிக்கும் பிரிவுகளை (இங்கிலீசு மீடியம்) மிகத் தீவிரமாகத் தமிழ்நாடு அரசு உருவாக்கி வருகிறது. அயல்மொழியான ஆங்கிலத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்கும் நிலை மாணவர்களுக்கு உள்ளது. இதனால் சொந்தச் சிந்தனை ஆற்றலும் ஆளுமையும் வளராமல் போகின்றன.
தாய்மொழியான தமிழைத் தவிர்த்து விட்டு ஆங்கிலவழியில் படிப்போர்க்கு மரபு சார்ந்த பண்புகள் தெரிவதில்லை; அதற்கேற்ற மனநிலை வளர்வதில்லை. சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் உதிரி மனப்பான்மையும், தான் வாழ்ந்தால் போதும் என்ற மிகை நுகர்வு வேட்கையும் மிகுந்தவர்களாகி விடுகிறார்கள். திருமணத்திற்குப் பின் பெற்றோரைக் கவனிக்காமல் பிரிந்து விடுதல், பின்னர் கணவன் - மனைவி உறவில் இணக்கமின்மை போன்ற உளவியல் ஊனங்கள் பெரும்பாலும் ஆங்கிலவழியில் பயின்றோர்க்கு ஏற்படுகின்றன.
பெற்றோர்கள் ஆங்கிலவழியில் பிள்ளைகளைச் சேர்க்க விரும்புவதால் அதனைக் கட்டண மில்லாமல் அரசு பள்ளிகளில் தருகிறோம் என்கிறது தமிழ்நாடு அரசு. பெற்றோர்கள் மேற்கண்ட அவலங்களை எண்ணிப் பார்த்துத் தமிழ்வழிக்குத் திரும்ப வேண்டும்.
கடந்த காலங்களில் கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து முதல் தலைமுறையாக - இரண்டாம் தலைமுறையாகப் படிக்க வரும் மாணவர்களை ஆங்கில மொழி அச்சுறுத்தி பள்ளியை விட்டு விரட்டி வருகிறது. பாதியில் படிப்பை நிறுத்தி விடுவோரில் ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட பிரிவினரே அதிக விகிதத்தினர், காலம் காலமாகக் கல்வியில் ஆதிக்கம் செலுத்துவோர், நவீன காலத்தில் நவீன முறையில் தங்கள் ஆதிக்கத்தை நீட்டித்துக் கொள்ள ஆங்கிலத்தை ஓர் ஆயுதமாக ஏந்துகின்றனர். தமிழ்வழியில் போட்டி நடந்தால்தான் ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் ஆதிக்க சக்திகளுடன் போட்டியிட்டுத் தங்களுக்குரிய பங்கை மீட்டுக் கொள்ள முடியும். ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக மட்டும் கற்கலாம்.
தமிழ்நாடு 1956-இல் தமிழ்மொழி பேசும் மக்களுக்கான தாயகமாக உருவாக்கப்பட்டது. அதே ஆண்டு தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்டது. பள்ளிக் கல்வியிலிருந்து தமிழ் அகற்றப்பட்டால், தமிழ்மொழி அழியும்; தமிழ் மக்கள் தங்கள் தாயகத்தை இழப்பர்; அயல்மொழி பேசும் மற்றவர்களை அண்டிப்பிழைக்கும் நிலைக்கு உள்ளாவர்.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவுகளை 2013-2014 கல்வியாண்டிலிருந்து செயல்படுத்திய பின், ஆயிரக்கணக்கான பள்ளிகளில் தமிழ்வழிப் பிரிவுகளே இல்லை. இந்நிலையில் தமிழ்வழிக் கல்வியைக் காத்திட 18.05.2013 அன்று உருவானதுதான் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம்! அது கடந்த இரண்டாண்டுகளில் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் விரும்பிச் சேர்க்கும் வகையில் கீழ்வரும் கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும்.
1. அரசு பள்ளிகளில் இதுவரை தொடங்கப்பட்ட ஆங்கிலவழிப் பிரிவுகள் அனைத்தையும் நீக்கி - தமிழ்வழிப் பிரிவுகள் மட்டுமே இருக்குமாறு செய்ய வேண்டும்.
2. முதல்நிலையில் தமிழ் மொழிப்பாடமாக இல்லாமல் - பயிற்று மொழியில் தமிழ்மொழி இல்லாமல் சி.பி.எஸ்.சி. உட்பட எந்தத் தனியார் பள்ளியும் அரசு பள்ளியும் தமிழ்நாட்டில் தொடங்க அனுமதி அளிக்கக் கூடாது.
3. மேல்நிலைப் பள்ளிக் கல்வி வரை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு - வேலை வாய்ப்பிலும் உயர்கல்விச் சேர்க்கையிலும் 80 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிச் சட்டம் இயற்ற வேண்டும்.
4. அனைத்துப் பள்ளிகளிலும் போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை அமர்த்த வேண்டும். சோதனைக்கூடம், விளையாட்டுத் திடல், கழிவறைகள் செயல்பட வேண்டும். விளையாட்டு, இசை, ஓவியம் ஆகியவற்றிற்குத் தனித்தனி ஆசிரியர்கள் அமர்த்த வேண்டும்.
5. வணிக நோக்கில், 9-ஆம் வகுப்பில் அதற்குரிய பாடம் நடத்தாமல், பத்தாம் வகுப்புப் பாடத்தை நடத்துவது - மேல்நிலைப் பள்ளியில் முதல் ஆண்டு பாடம் நடத்தாமல், இரண்டாம் ஆண்டுப் பாடம் நடத்துவது போன்ற சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடும் தனியார் பள்ளிகளின் உரிமத்தை நீக்கி வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேல்நிலை முதலாம் ஆண்டுத் தேர்வையும் பொதுத் தேர்வாக்க வேண்டும்.
தமிழ் காக்க... தமிழ் மக்களின் அறிவும் ஆளுமையும் வளர்க்க...
தமிழ்நாடு காக்க.. மறியல் போராட்டத்திற்கு வாருங்கள்!
=========================================
செய்தித் தொடர்பகம்,
தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம்
=========================================
இணையம்: tamizhvazhikalvi.blogspot.com
முகநூல்: fb.com/profile.php?id=100009894487476
=========================================
பேச: 76670 77075, 94432 74002
=========================================
செய்தித் தொடர்பகம்,
தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம்
=========================================
இணையம்: tamizhvazhikalvi.blogspot.com
முகநூல்: fb.com/profile.php?id=100009894487476
=========================================
பேச: 76670 77075, 94432 74002
=========================================
0 கருத்துகள்:
Post a Comment