"தமிழ் வழியில் படிக்காவிட்டால் நமது அடையாளத்தை இழந்துவிடுவோம்” - திருப்பூரில் நடைபெற்ற கருத்தரங்கம்!


தமிழ் வழியில் படிக்காவிட்டால் நமது அடையாளத்தை இழந்து விடுவோம் என்று, அகில இந்திய துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் வா.அண்ணாமலை பேசினார்.

தமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் சார்பில், "ஆங்கில வழிக் கல்வியும், தமிழ்மொழி அழிப்பும்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம், திருப்பூர், காவேரியம்மன் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதற்கு, தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் மாநில அமைப்பாளர் வீ.சிவகாமி தலைமை வகித்தார். நொய்யல் இலக்கிய மையத்தின் நிர்வாகி இளஞாயிறு வரவேற்றார்.

பேரூர் ஆதீனம் இளைய பட்டம் மருதாசல அடிகள், இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இயக்கத்தின் அமைப்பாளர் உமர்கயான் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

இதில், அகில இந்திய துவக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் வா.அண்ணாமலை பேசியது:

உலகில் அனைத்து நாடுகளிலும், அவரவர் தாய்மொழியில் தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. அவரவர் தாய்மொழியில் தான் பேசுகிறார்கள். இந்தியாவில் கூட வட மாநிலங்களில் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்று மொழியாக இல்லை. தமிழகத்திலோ தொடக்கக் கல்வியில், அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்று மொழியாகத் திணிக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் படிக்காவிட்டால் நமது அடையாளத்தை இழந்து விடுவோம். தமிழ் மொழியை அழிக்கும் இதே நிலை தொடருமானால் இன்னும் 5 ஆண்டுகளில் தமிழ்வழிக் கல்வியே இல்லாத நிலை ஏற்பட்டுவிடும்.

அதே வேளையில் தமிழகத்தில் தற்போது ஆங்கிலம் கற்கும் மாணவர்கள், ஆங்கிலமும் தெரியாமல், தமிழையும் படிக்காமல் படிப்பறிவற்ற சமுதாயமாக மாறக்கூடிய சூழல் உருவாகிவிடும். தமிழ் மொழியைக் காப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்றார்.

இதில், சுழல்விளக்கு இதழ் ஆசிரியர் செ.நடராசன், தமிழ்வழிக் கல்வி கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், திருப்பூர் தாய்த்தமிழ் பள்ளி நிர்வாகிகள் முத்துசாமி, சமரன் பாலா, கு.ந.தங்கராசு உள்ளிட்டோர் பேசினர்.

இதில், தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் ஆங்கிலப் பிரிவு துவங்கப்படும் என்ற அறிவிப்பை ரத்து செய்து செய்ய வேண்டும். 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 80 சதவிகிதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை அரசு, தனியார் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த சட்டமியற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செய்தி: தினமணி
Share on Google Plus

About தமிழ்த் தேசியன்

    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துகள்:

Post a Comment