இந்திய அரசின் ராஷ்டிரிய ஆதர்ச வித்யாலயா பள்ளித் திட்டத்தைத் தமிழக அரசு எதிர்க்க வேண்டும் : பெ.மணியரசன் வேண்டுகோள்

 

இந்திய அரசின் ராஷ்டிரிய ஆதர்ச வித்யாலயா பள்ளித் திட்டத்தைத் தமிழக அரசு எதிர்க்க வேண்டும் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் வேண்டுகோள்!

கல்வியை இந்தி மயமாக்கும் திட்டத்தின் இன்னொரு பாய்ச்சலாக இப்பொழுது ராஷ்டிரிய ஆதர்ஷ் வித்தியாலயா பள்ளிகள் தொடங்கும் திட்டத்தை இந்திய அரசு வகுத்துள்ளது.

உயர்தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்கும் நல்ல நோக்கத்துடன், மாதிரிப்பள்ளிகளாக ராஷ்டிரிய ஆதர்ஷ் வித்தியாலயா பள்ளிகளைத் தொடங்குவதாக இந்திய அரசு கூறிக் கொள்கிறது.

இப்பள்ளிகளில் மொழிப்பாடமாக இந்தியும், ஆங்கிலமும் இருக்கும். பயிற்று மொழியாக இந்தி அல்லது ஆங்கிலம் இருக்கும். தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயமொழிப் பாடமாக இருக்காது தமிழை மொழிப் பாடமாகக் கற்பது மாணவர் விருப்பத்தைப் பொறுதத்தாக இருக்கும். பயிற்றுமொழியாக தமிழ் அறவே இருக்காது.

நடுவண் அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம்தான் இப்பள்ளியில் இருக்கும். தமிழக அரசின் சமச்சீர் பாடத்திட்டம் இருக்காது.

இப்பள்ளிகள் நடுவண் அரசின் நிதிஉதவியுடன் நடக்கும் தனியார் பள்ளிகளாக இருக்கும். இதற்காக தனியார் புதிதாகப் பள்ளிகள் தொடங்கலாம் அல்லது இப்போதுள்ள தனியார் பள்ளிகளை இத்திட்டத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். பள்ளியின் உள்கட்டுமான வசதிகளுக்காக ஆண்டு தோறும் செய்யப்படும் செலவில் 25 விழுக்காட்டுத் தொகையை
நடுவண் அரசு அளித்திடும், பத்தாண்டுகளுக்கு இவ்வாறு நடுவண் அரசு நிதி உதவி வழங்கும். அதன் பிறகு தமிழ்நாடு அரசு அந்தத் தொகையை அளிக்க வேண்டும். நாற்பது விழுக்காட்டு இடங்களில் மட்டும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவர். அறுபது விழுக்காட்டு இடங்களில் தனியார் நிறுவனம் தனது முடிவின்படி சேர்த்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு வைக்கப்படும். இடஒதுக்கீடுள்ள நாற்பது விழுக்காட்டு மாணவர்களின் கல்விக் கட்டணத்தை இந்திய அரசு அந்தத் தனியார்க்கு அளித்துவிடும். எஞ்சிய அறுபது விழுக்காட்டு மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தைத் தனியார் நிறுவனம் தன் விருப்பப்படி முடிவு செய்து வசூலித்துக் கொள்ளலாம்.

மேல்நிலைப் பள்ளி வரை உள்ள கல்வியை இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தனியார் துறை வசம் ஒப்படைக்க இத்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் முதற்கட்டமாகப் பள்ளிக் கல்வியின் மீதுள்ள மாநில அரசு அதிகாரத்தை இந்திய அரசு நீக்கிவிடும்.

அந்தந்த மாநிலத்தில் உள்ள மொழி – அது சார்ந்த தேசிய இனம் – அத் தேசிய இனத்தின் மரபுகள், பண்புகள், அடையாளங்கள் ஆகியவற்றைப் பாதுகாத்து வளர்க்கும் நோக்குடன்தான் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. இந்த நோக்குடன் கல்வியானது மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் வைக்கப்பட்டது. ஆனால் நெருக்கடி நிலை காலத்தைப் பயன்படுத்தி அன்றைய பிரதமர் இந்திரா காந்தி 1976இல் கல்வியை நடுவண் அரசுக்கும், மாநில அரசுக்கும் பொதுவான பொதுப் பட்டியலுக்கு மாற்றினார். பொதுப்பட்டியலில் உள்ள ஒரு துறையில் நடுவண் அரசு அதிகாரமே மேலோங்கியதாக இருக்கும். அதில் நடுவண் அரசின் ஆணைக்கு மாநில அரசு கட்டுப்பட்டாக வேண்டும்.

இப்பொழுது நடை முறையில் பெரிதும் பள்ளிக் கல்வி மாநில அரசின் கீழ் செய்படுகிறது. இதைத் தன் வசப்படுத்திக் கொள்ள இந்திய அரசு தீவிரமாக முயல்கிறது. இதன் மூலம் மாநில தேசிய இனங்களின் தாய்மொழி – மரபு – பண்பாடு ஆகியவற்றைப் புறந்தள்ளி, இந்தி மொழி மயம் – ஒற்றைமுகங்கொண்ட வடநாட்டு இந்தியமயம் ஆகிய உள்ளடக்கம் கொண்ட கல்வியைப் புகுத்தி, இளம் பருவத்திலேயே இந்தி மொழி பேசாத மாநிலங்களில் மாணவர்களைத் தங்கள் தாய் மொழியையும், அடையாளங்களையும் கைவிடச் செய்யும் தந்திரம் இத்திட்டத்தில் உள்ளது.

ஆங்கிலம் மற்றும் இந்தியில் படித்தால் வெளிநாடுகளில், பன்னாட்டு நிறுவனங்களில், இந்தியாவின் பிறமாநிலங்களில் வேலை கிடைக்கும் என்ற ஆசை ஏற்கெனவே, பெற்றோர்களுக்கு ஊட்டப்பட்டுள்ளது. இந்த ஆசைக்குத் தூண்டில் போட்டு, மாணவர்களை ஈர்க்க இந்திய அரசு முயல்கிறது.

முதற்கட்டமாக இந்தியா முழுவதும் 2500 ராஷ்ட்டிரிய ஆதர்சப் பள்ளிகளைத் தொடங்க உள்ளதில், தமிழ்நாட்டில் மட்டும் 356 பள்ளிகள் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. முதலில் வீழ்த்த வேண்டியது தமிழகம்தான் என்பது இந்திய அரசின்த் தொலைநோக்குத் திட்டம் எனத் தெரிகிறது. ஏற்கெனவே இதே போல் கல்வித் திட்டமுள்ள – முழுக்க நடுவண் அரசின் நிதியில் இயங்கக் கூடிய நவோதயா பள்ளிகளை இந்திய அரசு திணித்தது. அப்போது அதை அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆ.ரும், அவர்க்குப் பின்னர் வந்த முதலமைச்சர்களும் ஏற்க மறுத்தார்கள். 

எனவே அத்திட்டம் தமிழ்நாட்டில் செயல்படவில்லை. இப்போது, ராஷ்டிரிய ஆதர்ஸ் வித்யாலயாப் பள்ளித் திட்டத்தை தமிழக அரசு எதிர்க்காமல் இருப்பது வியப்பளிக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் சி.பி.எஸ்.இ. கல்வித்திட்டத் தலைமையகம், மாநிலங்களில் தொடங்கப்படும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு மாநில அரசுகளிடம் தடையில்லாச் சான்றிதழ் வாங்க வேண்டும் என்று இருந்த நிபந்தனையை நீக்கியது. மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலேயே இப்பள்ளிகளைத் தொடங்கலாம் என்று அறிவித்தது. அந்த அறிவிப்பையும் தமிழக அரசு எதிர்த்ததாகத் தெரிய வில்லை.

தமிழக முதலமைச்சர் அவர்கள் இச்சிக்கலில் கவனம் செலுத்தி, தமிழ்நாட்டில் ராஷ்டிரிய ஆதர்ச வித்தியா பள்ளிகள் தொடங்கும் நடுவண் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதுடன். சி.பி.எஸ்.இ பள்ளிகள் தொடங்கிடவும் அனுமதிக்கக் கூடாது என்று தமிழ்வழிக் கல்விக் கூட்டியிக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழறிஞர்களும், தமிழ் மக்களும் இந்திய அரசின் இந்திமய – இந்தியமயப் பள்ளிகள் தொடங்கும் ராஷ்டிரிய ஆதர்ஸ் வித்தியாலயா திட்டத்தை முறியடிக்கப் போராட்டங்கள் நடத்த முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


இங்ஙனம்,
பெ.மணியரசன்

ஒருங்கிணைப்பாளர், தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம்
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

Share on Google Plus

About தமிழ்த் தேசியன்

    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துகள்:

Post a Comment